தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததை , முதலமைச்சரின் அதிகாரபூர்வ X தளப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Grok AI, தற்போதைய முதலமைச்சர் விஜய்க்குப் பதிலாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த ராகுல் காந்தி!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை, அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் தாரகை கத்பர்ட் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பான தகவலை, தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரபூர்வ X தளப் பக்கமான `@CMOTamilNadu` வெளியிட்டிருந்தது. அதில், ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தை தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்ப் பதிவில் விஜய் பெயர்; ஆங்கில மொழிபெயர்ப்பில் ஸ்டாலின் பெயர்!
முதலமைச்சரின் அதிகாரபூர்வ X பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில்,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் பதிவை X தளத்தின் Grok AI வசதி மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, முதலமைச்சர் விஜய்யின் பெயருக்குப் பதிலாக, திமுக தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் பெயரை இடம்பெற்றது.
அந்த ஆங்கில மொழிபெயர்ப்பில்,
“Today (10.10.2026), the Hon'ble Leader of the Opposition in the Lok Sabha, Mr. Rahul Gandhi, met and spoke with the Hon'ble Tamil Nadu Chief Minister Thiru. M. K. Stalin.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, தமிழ்ப் பதிவில் முதலமைச்சர் விஜய் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
Grok AI மொழிபெயர்ப்பில் ஏற்பட்டது என்ன?
X தளத்தில் பதிவிடப்படும் தகவல்களைப் பிற மொழிகளில் புரிந்துகொள்வதற்கு மொழிபெயர்ப்பு வசதிகள் உதவுகின்றன. அந்த வகையில், Grok AI மூலம் கிடைக்கும் மொழிபெயர்ப்புகளும் பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர்கள், பதவிகள் மற்றும் அரசியல் சார்ந்த தகவல்களை மொழிபெயர்க்கும்போது துல்லியம் மிகவும் அவசியம். குறிப்பாக, ஒரு மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரைக் குறிக்கும் பதிவில் வேறொரு அரசியல் தலைவரின் பெயர் இடம்பெற்றது தகவல் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரலாக மாறிய சம்பவம்!
முதலமைச்சர் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு தொடர்பான பதிவில், Grok AI மொழிபெயர்ப்பில் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றது தற்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி, பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
LIVE 24 X 7









