அரசியல்

"டிரம்பிற்குப் பதில் விஜய்யே அமெரிக்க அதிபராகலாம்".. கலாய்த்த இபிஎஸ்!

விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edappadi palaniswami (AI Image)
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சிச் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ரியல் இல்லை... ரீல்ஸ் மட்டுமே!

தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனல்மின் நிலையத் திட்டம் அறிவிப்போடு மட்டுமே உள்ளது, உடனடியாக நடைமுறைக்கு வராது. அவர்கள் ஆட்சிக்கு வந்து கொடுத்த இரு அறிவிப்புகளில் ஒன்று ஏற்கெனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவசப் பேருந்துத் திட்டம்தான். திட்டமிடல் இல்லாத செயல்பாடே தவெக ஆட்சி," எனக் குறிப்பிட்டார்.

மேலும், "இந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திப் பணத்தைக் கைப்பற்றி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இதனை எப்படி ஊழலற்ற தூய்மையான ஆட்சி என்று சொல்ல முடியும்? எங்கே சோதனை நடந்தாலும் உடனே ரீல்ஸ் போடுகிறார்கள்; ஊடகங்களும் அதற்கு மெருகூட்டுகின்றன. ரீல்ஸ் போட்டே காலத்தைக் கடத்துகிறார்கள், அதில் ரியல் எதுவும் இல்லை," என்று சாடினார்.

ட்ரம்பிற்குப் பதில் விஜய் அதிபராகலாம்!

பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற தவெகவினர் விருப்பம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த, "முதலமைச்சர் விஜய் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பதிலாகக் கூட அதிபராகலாம், அது அவருடைய விருப்பம். ஆனால், இங்கு ரீல்ஸ் விடுவது போல அங்கு ரீல் விட முடியாது; அது நடக்காது," என்று கூறினார்.

"ஐந்து ஆண்டுகள் நீடிக்காது"

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பதாகத் தெரிவித்தார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். தவெக ஆட்சி செல்லும் போக்கைப் பார்த்தாலே இது ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவுமின்றி, வருவாய்க்கு வழியில்லாமல் கடன் மட்டுமே வாங்கி வருகிறார்கள்," என்று குற்றம்சாட்டினார்.