அரசியல்

புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!

புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!
Seeman
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியானதிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தலைமைச் செயலகத் திட்டம் மற்றும் தவெக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

புதிய தலைமைச் செயலகம் எதற்கு?

தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சீமான், "தற்போதுள்ள இடத்தில் ஆட்சி நடத்த முடியவில்லையா? உட்காரும் இடத்தில் ஏதேனும் உறுத்துகிறதா? மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் ரூ.1,200 கோடி செலவில் புதிய கட்டிடம் எதற்கு?" எனக் கண்டனம் தெரிவித்தார்.

சட்டமன்றம் குறித்த விமர்சனம்

தொடர்ந்து பேசிய அவர், அறிவார்ந்த பெருந்தலைவர்களும் சான்றோர்களும் அலங்கரித்த சட்டமன்ற அவையைத் தவெகவினர் சினிமா மன்றமாக மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். விஜய் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்தது, தேர் இழுத்தது போன்ற செய்திகளையெல்லாம் அவையில் பேசுகின்றனர் என்றும், "உங்களைப் பார்த்தால் மெர்சலாகிறது", "துள்ளாத மனமும் துள்ளுகிறது" எனப் பேசி அவையின் கண்ணியத்தைக் குறைப்பதாகச் சாடினார்.

அமைச்சர்கள் மீது தாக்கு

மேலும் அவர், "சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த தலைவர்கள் அமைத்துத் தந்த அவையில், இப்போதுள்ள சில அமைச்சர்கள் குறிப்புகளைப் பார்த்துப் படிக்கக்கூடத் தடுமாறுகிறார்கள். போதை உருவாக்க மையம் அமைக்க வேண்டும் என்று பேசும் இத்தகைய காட்சிகளைக் காண்பதற்காகவா நமது முன்னோர்கள் விடுதலை வாங்கித் தந்தார்கள்?" என்று அதிருப்தி தெரிவித்தார்.