தமிழ்நாட்டுக்கென தனியாக ஒரு மாநிலக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது அரசியல் மேடைகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "பல மாநிலங்களுக்குத் தனியாக மாநிலக் கொடி இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு அப்படி ஒரு கொடி இல்லை. எனவே, தமிழ்நாட்டுக்கான மாநிலக் கொடி அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புதான் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்கள் தனிக் கொடி வைத்திருப்பதைத் தடை செய்யவில்லை என்றாலும், இந்த அறிவிப்புக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பாஜகவின் வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இத்தகைய பேச்சுகள் பிரிவினைவாத மனநிலையை வளர்க்கும் ஆபத்து கொண்டவை. தமிழ் அடையாளத்தையும் இந்திய அடையாளத்தையும் ஒன்றுக்கொன்று போட்டியாகப் பார்க்கும் மனநிலையை மக்களிடம் உருவாக்கக் கூடாது. இரண்டையும் பெருமையாகக் கருத வேண்டிய நேரத்தில், தேவையற்ற பிளவை ஏன் உருவாக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Thiru @AadhavArjuna Arjun, Our language did not wait for your flag. Our civilisation does not need your certificate. And our Tamil identity does not become any smaller beneath the Indian Tricolour. This rhetoric risks nurturing a separatist mindset, teaching people to see their Tamil and Indian identities as competing loyalties. Why manufacture a divide where we should take pride in both? And if your concern is truly Tamil, show some consistency. You insist on Tamil in temples. Will you demand the same in churches and mosques? Or does your enthusiasm for compulsory Tamil stop at the temple gates? தமிழ் மீது பற்றா? இந்துக் கோயில்களில் மட்டும் அதிகாரம் செலுத்தும் அரசியலா? Apply your principle equally. Then lecture us about a Tamil flag. Tell us your plans for Tamil-medium students, jobs for our youth, Tamil research and opportunities for our entrepreneurs. Give us targets. Give us deadlines. Designing a flag is easy. Delivering a future takes work. தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்துங்கள். அவர்களின் அடையாளத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். தமிழனாக இருப்பதும் இந்தியனாக இருப்பதும் எங்களுக்கு முரண்பாடல்ல. இரண்டுமே எங்கள் பெருமை! @TVKVijayHQ @BJP4India @rammadhav_ @blsanthosh
— Vinoj P Selvam (@VinojBJP) November 1, 2026
மேலும், "உங்கள் கொடிக்காகக் காத்திருந்துதான் நமது மொழி வளரவில்லை. நமது நாகரிகத்துக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை. இந்திய மூவர்ணக் கொடியின் கீழ் இருப்பதால் நமது தமிழ் அடையாளம் எந்த வகையிலும் சிறிதாகிவிடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருமொழிக் கொள்கை... கட்டாயத் தமிழ்!
மாநிலக் கொடி விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை குறித்தும் ஆதவ் அர்ஜுனா தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், பள்ளிப் பருவத்திலிருந்தே தாய்மொழியான தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஆங்கிலம் என்பது வணிகத்துக்கான மொழி மட்டுமே. சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். அதேபோல், தமிழும் விருப்பப்பட்டால் தேர்வு செய்யக்கூடிய மொழியாக இருக்கக் கூடாது. அது கட்டாயமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கும் பாஜக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கோயில்களில் தமிழ் வழிபாட்டை வலியுறுத்தும் நீங்கள், தேவாலயங்களிலும் மசூதிகளிலும் தமிழை வலியுறுத்துவீர்களா? அல்லது கோயில்களுடன் மட்டும் உங்கள் தமிழ் ஆர்வம் முடிந்துவிடுகிறதா? என வினோஜ் பி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள், இளைஞர்களின் எதிர்காலம், தமிழ் ஆராய்ச்சி மற்றும் தமிழ் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
"கொடிக்கான வடிவமைப்பை உருவாக்குவது எளிது. ஆனால், மக்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்குத்தான் உழைப்பு தேவை. திட்டங்கள் என்ன, இலக்குகள் என்ன, அவற்றை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்பதைச் சொல்லுங்கள்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே மொழி அரசியல், மாநில உரிமைகள் தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது மாநிலக் கொடி அறிவிப்பும் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
இது வெறும் தமிழர் அடையாளம் சார்ந்த முன்னெடுப்பா அல்லது அரசியல் ரீதியான புதிய நகர்வா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
LIVE 24 X 7









