அரசியல்

இளைஞர்களுக்கு பைக் வாங்க ரூ.10,000 மானியம்: கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டது அதிமுக!

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பைக் வாங்க ரூ.10,000 மானியம்: கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டது அதிமுக!
ADMK
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளில், சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அரசு கேபிள் டிவி கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்றும், பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு 'அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்' கீழ் புதிய வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பாதுகாப்பு

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் பனைத் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு முறையே ரூ.25 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மா விவசாயிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தல், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட முந்திரித் தொழிலாளர்களுக்கு இலவசக் கைக் கருவிகள் வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் 'வார் ரூம்' அமைக்கப்படும் என அதிமுக உறுதியளித்துள்ளது. இளைஞர்கள் சிறு தொழில் தொடங்க விண்ணப்பித்தால் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், மானியத் தொகையும் 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் இளைஞர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.