அரசியல்

தவெக கூட்டணிக்குப் பெயர் சூட்டிய பிரவீன் சக்கரவர்த்தி: "அதிகப் பிரசங்கித்தனம்" என சிபிஎம் சாடல்!

Praveen Chakravarthy names Thaweka alliance: CPM slams him for too much preaching

தவெக கூட்டணிக்குப் பெயர் சூட்டிய பிரவீன் சக்கரவர்த்தி:
P Shanmugam
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) இடத்திற்குத் தவெக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக வலைதளப் பதிவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தமிழகத்தில் காலியான இடத்திற்குத் தவெக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இடத்தை ஒதுக்கியது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணிக்கு "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணி" என்று பெயரிட்டு, அதன் முதல் எம்.பி வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்வதாகப் பதிவிட்டிருந்தார். மேலும், தனக்கு வாய்ப்பளித்த ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு அவர் நன்றியும் தெரிவித்திருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவிற்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், தவெக கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்பது குறித்தோ யாரும் தங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு அளித்தது என்பது ஏற்கனவே விளக்கப்பட்ட ஒன்று என்றும், அதை விடுத்துப் புதிய கூட்டணி எனப் பெயர் சூட்டி தங்களை இணைத்திருப்பது பிரவீன் சக்கரவர்த்தியின் "அதிகப் பிரசங்கித்தனம்" என்றும் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.