அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சொல்லியடித்த த.வெ.க!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், த.வெ.க வெற்றி பெற்றுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சொல்லியடித்த த.வெ.க!
BY Election

தமிழ்நாட்டில் காலியாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக, அதிமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

மரகதம் குமரவேல் வெற்றி

27 வேட்பாளர்கள் போட்டியிட்ட மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின. 21 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 72,103 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 51,801 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 46,034 வாக்குகளும் பெற்றனர். இதனால் மரகதம் குமரவேல் 20,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார். நாம் தமிழர் கட்சி 2,083 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,506 வாக்குகளையும் பெற்றன.

சத்யபாமா அபார வெற்றி

22 வேட்பாளர்கள் களம் கண்ட தாராபுரம் தொகுதியில் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 23 சுற்றுகளாக எண்ணப்பட்ட முடிவில், த.வெ.க வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளும் பெற்ற நிலையில், சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி 5,268 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,157 வாக்குகளையும் கைப்பற்றின.

தொண்டர்கள் கொண்டாட்டம்

இரு தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் பெற்ற இந்த வெற்றியைக் கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியைத் தங்கள் அரசின் 4 மாத கால ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என அமைச்சர்கள் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.