அரசியல்

சொல்லாம போனா அடிச்சே புடுவாங்க..! பேரவையில் கலகலப்பூட்டிய வால்பாறை எம்.எல்.ஏ.!

தொகுதியின் கோரிக்கைகளை சொல்லாவிட்டால் மக்கள் அடித்தே விடுவார்கள் என்று வால்பாறை திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சொல்லாம போனா அடிச்சே புடுவாங்க..! பேரவையில் கலகலப்பூட்டிய வால்பாறை எம்.எல்.ஏ.!
MLA Sudhakar
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வால்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் கலகலப்பான பேச்சும் சுவாரஸ்யமான அணுகுமுறையும் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தின.

"மணி அடிக்காதீங்க சாமி வந்துடும்"

தமது தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றிய எம்.எல்.ஏ. சுதாகர், வால்பாறையில் வசிக்கும் மதுரை மற்றும் திருச்சி மக்களுக்குச் சொந்த ஊர் செல்ல நேரடிப் பேருந்து வசதியும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்குக் கேரளாவுக்கு இணையான ஊதியமும் வழங்க வேண்டும் எனப் பேசினார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததால் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மணியடித்து உரையை முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு, "ஐயா மணி அடிக்காதீங்க, எனக்கு சாமி வந்துவிடும்" என்று சுதாகர் நகைச்சுவையாகக் கூறியது சட்டப்பேரவையை அதிரவைக்கும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

"சொல்லாம போனா அடிப்பாங்க"

தொடர்ந்து பேசிய அவர், "தொகுதி மக்கள் எல்லா கோரிக்கைகளையும் பேரவையில் சொல்லிவிட்டுத்தான் வர வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். 720 கி.மீ. கடந்து வருகிறேன், இவற்றைச் சொல்லாமல் ஊருக்குத் திரும்பினால் மக்கள் அடித்தே விடுவார்கள், பேச கொஞ்சம் நேரம் கொடுங்கள்" எனக் கலகலப்பாக வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், வால்பாறையில் உள்ள 40 எஸ்டேட்களில் செல்போன் டவர் வசதி இல்லாததால் யானைகள் வரும்போது எச்சரிக்கைக் கூட கொடுக்க முடிவதில்லை என்று குறிப்பிட்ட அவர், "டவர் இல்லாததால்தான் நானே எம்.எல்.ஏ ஆனேன், டவர் இருந்திருந்தால் இன்ஸ்டா ரீல்ஸே வந்திருக்கும்" என்று கூறியபோது அவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் ரசித்தனர்.