இந்தியா

ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!

இந்திய கடலோர காவல்படைக்கும் (ICG) ஜப்பான் கடலோர காவல்படைக்கும் (JCG) இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘JCGS Itsukushima’ என்ற கப்பல் நேற்று (ஜூலை 7) சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது ‘உலக கடல் பயணம் பயிற்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!
ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!
இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல்படைகளுக்கு இடையேயான ஆழமான மற்றும் நீடித்த நட்புறவை எடுத்துக்காட்டுவதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு ரீதியான ஒத்துழைப்பை உறுதி செய்வதோடு, இரண்டு கடற்படைகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னை வருகை தந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பல் மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த வீரர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் மற்றும் என்சிசி மாணவர்கள் வரவேற்றனர். கப்பலில் வந்த குழுவினர் சென்னையில் ஒரு வாரம் தங்கி, அதிகாரப்பூர்வ சந்திப்புகள், கப்பல் வருகைகள், கூட்டுப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் கடலோர காவல்படையின் துணைத் தளபதி ஹிரோகி காவோசு தலைமையிலான குழு, இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், ஜப்பானிய பிரதிநிதிகள், கிழக்கு கடலோர காவல்படை கமாண்டர் டோனி மைக்கேல் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

சென்னையில் பயிற்சி முடிந்ததும், ‘JCGS Itsukushima’ கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து ‘ஜா மாதா’ என்ற கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. ஜா மாதா என்றால் ஜப்பானிய மொழியில் ‘மீண்டும் சந்திப்போம்’ என்று அர்த்தம். இந்த பயிற்சியின் மூலம் கடலில் ஒருங்கிணைப்பையும், செயல்பாட்டு திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கடலோர காவல்படையின் நான்கு அதிகாரிகள் ‘சீ ரைடர்ஸ்’ பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ‘JCGS Itsukushima’ கப்பலில் சிங்கப்பூர் வரை பயணிக்க உள்ளனர். மேலும், இந்த பயிற்சியைத் தொடர்ந்து சிங்கப்பூர் செல்லும் இஸ்டுகுஷிமா கப்பலில், இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு வீரர்களும் உடன் செல்லவுள்ளனர். இஸ்டுகுஷிமா கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படையின் 53 வீரர்கள் சென்னைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது இரு நாட்டின் படைகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒத்துழைப்பு, சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் ‘சாகர்’ (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்கு மற்றும் இந்தோ-பசிபிக் கடல்சார் முன்முயற்சி ஆகியவற்றின் கீழ் பொதுவான கடல்சார் முன்னுரிமைகளை இது ஒருங்கிணைக்கிறது.

‘JCGS Itsukushima’ கப்பலின் வருகை கடல்சார் ராஜதந்திரத்தை மேம்படுத்துவதோடு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பை அதிகரித்து, இரு கடலோர காவல்படைகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும், நட்பையும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.