இந்தியா

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு?
Union Cabinet
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், தற்போதைய அமைச்சர்கள் 12 பேர் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, தற்போது கேபினெட் மற்றும் இணை அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கும் 10 முதல் 12 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்குச் சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் சிலர் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் எனத் தெரிகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை

அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் நபர்களுக்குப் பதிலாக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU), சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (TDP) மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCP) உள்ளிட்ட கட்சிகளுக்குப் புதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் ஜூன் மாதம் 15 அல்லது 18-ஆம் தேதிகளில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் தலைமுறைக்கு வழிவகை

மேலும், நாடாளுமன்ற மேல்சபை (ராஜ்யசபா) பதவிக்காலம் முடியவுள்ள சில அமைச்சர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கு மாற்றப்பட உள்ளனர். வரவிருக்கும் பல்வேறு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கோடும், 70 வயதைக் கடந்த மூத்த அமைச்சர்கள் சிலரை பதவியிலிருந்து விடுவித்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது.