90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளில் இன்றளவும் மறக்க முடியாத சில வில்லன் கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ‘பொட்டு அம்மன்’ படத்தில் வில்லனாக நடித்து, தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் அன்றைய சிறுவர்களை மிரள வைத்தவர் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா.
2000-ம் ஆண்டு வெளியான ‘பொட்டு அம்மன்’ திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா நடித்த வில்லன் கதாபாத்திரம் அப்போது பெரும் கவனம் பெற்றது. குறிப்பாக, அவரது வித்தியாசமான தோற்றமும், சூனியக்கார கதாபாத்திரத்தை ஒத்த மேக்கப்பும் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், தற்போது அவர் ‘பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்’ திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுதான்.
ஒருகாலத்தில் திரையில் தோன்றினாலே பயமுறுத்திய சுரேஷ் கிருஷ்ணா, தற்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், “அட இவரா 90ஸ் கிட்ஸ் தூக்கத்தைக் கெடுத்தவர்?” என ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கிருஷ்ணா!
இதற்கிடையே, தமிழ் ரசிகர்களிடையே நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு சந்தேகத்துக்கும் சுரேஷ் கிருஷ்ணாவே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘பொட்டு அம்மன்’ படத்தில் நடித்த வில்லனும், ‘பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்’ படத்தில் வரும் பைஜு கதாபாத்திரமும் ஒரே நபரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சுரேஷ் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு படங்களிலும் இடம்பெற்ற தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/DeJvQHvh5fb/?stkn=ejluNjdhdHR1Z2E2
அதனுடன், “தமிழ் நண்பர்களே, இவை இரண்டும் நான்தான், சந்தேகமில்லை” என்ற பொருளில் பதிவிட்டுள்ளார். மேலும், இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் சித்தரிக்கப்பட்டவை என்பதால் குழப்பம் வேண்டாம் என்றும், இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்தது தானே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘பொட்டு அம்மன்’ படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சூனியக்காரியைப் போன்ற அந்த தோற்றம் மற்றும் வில்லத்தனமான நடிப்பு காரணமாக, அப்போது சிறுவர்களாக இருந்த பல 90ஸ் கிட்ஸ்களின் மனதில் அந்த கதாபாத்திரம் ஆழமாக பதிந்துவிட்டது.
“சிறுவயதில் உங்களைப் பார்த்து பயந்தோம்!”
சுரேஷ் கிருஷ்ணாவின் இந்த பதிவுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். “சிறுவயதில் இந்தப் படத்தில் உங்களைப் பார்த்து பயந்திருக்கிறோம்”, “இவர்தான் அந்த பொட்டு அம்மன் வில்லனா?” என பலரும் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மறுபுறம், மலையாள ரசிகர்களும் சுரேஷ் கிருஷ்ணாவின் பதிவின் கீழ் சுவாரஸ்யமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருகாலத்தில் 90ஸ் கிட்ஸ்களை மிரள வைத்த அதே நடிகர், இப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இதைப் பார்த்த 90ஸ் கிட்ஸ்கள், “வில்லன் சார்... இப்படி மாறிட்டீங்களே!” என ஆச்சரியத்துடன் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
LIVE 24 X 7









