தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய்யின் வருகைக்குப் பிறகு, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் என்ட்ரி குறித்த பேச்சுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட் ஹாட் டாபிக்... லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அரசியலுக்கு வரப்போகிறாரா என்பதுதான். இதுகுறித்து அவரது கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த பதில் இப்போது கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி வரும் அவர், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
குறிப்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சூழலில்தான், அவர் அரசியலுக்குள் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன.
2031 தேர்தலில் நயன்தாரா?
தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணமும் அதைச் சுற்றியுள்ள விவாதங்களும், மற்ற திரையுலகப் பிரபலங்களின் அரசியல் ஆர்வம் குறித்த எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2031 சட்டமன்றத் தேர்தலில் நயன்தாரா அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், இதுவரை நயன்தாரா அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
விக்னேஷ் சிவன் சொன்ன பதில் என்ன?
நயன்தாராவின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, விக்னேஷ் சிவன் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட தனது பதிலை அளித்தார். நயன்தாரா இப்போது தாயாகியிருப்பதாகவும், குடும்பத்தையும் வீட்டையும் கவனிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் தற்போது முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
விக்னேஷ் சிவனின் இந்தப் பதில், நயன்தாராவின் அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்கு மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. எனினும், இதை அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற உறுதியான அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது என்கின்றனர் நெட்டிசன்கள்.
சினிமாவா... அரசியலா?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் நயன்தாரா நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குடும்ப வாழ்க்கை, சினிமா என இரண்டையும் சமநிலைப்படுத்தி வரும் அவர், அரசியலுக்கு வருவாரா என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, திரையுலகில் இருந்து மேலும் யார் அரசியலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் நயன்தாராவின் பெயரும் அடிபடுவதால், விக்னேஷ் சிவனின் பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









