நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் தரிசனம் மேற்கொள்வதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.
மண்டல சீசனுக்காக கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதம் தொடங்கியதும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து சீசனுக்கான வழிபாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன.
டிசம்பர் 27-ல் மண்டல பூஜை.. ஜனவரி 14-ல் மகரவிளக்கு
நடப்பு சீசனில் டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளன. பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், தினமும் 18 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் நிலக்கல் மற்றும் எருமேலியில் ஒரே நேரத்தில் சுமார் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களுக்கான கட்டண வசூல் ஃபாஸ்டேக் முறையில் மேற்கொள்ளப்படும்.
பக்தர்களுக்கு குடிநீர்.. 60 இடங்களில் சுக்குநீர்
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரையிலான பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சரம் குத்தி முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் 60 இடங்களில் 24 மணி நேரமும் சுக்குநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் பக்தர்களுக்கு சுடுநீர் வழங்குவதற்காக 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வெடுக்க பந்தல்கள்.. 3 ஆயிரம் தற்காலிக கழிப்பறைகள்
பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக 8 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நிரந்தர பந்தல்களும் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 3 ஆயிரம் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக 50 லட்சம் டின் அரவணை பிரசாதங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் முன்பதிவு தீவிரம்.. தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
செல்போன், புகைப்படம் எடுக்க தடை
சபரிமலை சன்னிதானத்தின் புனிதத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் 18-ம் படிக்கு மேல் சன்னிதான பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்குவதையொட்டி சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்க உள்ள நிலையில், பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் ஐயப்பனை தரிசனம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
LIVE 24 X 7









