என்னது சமந்தாவுக்கு குறைமாத பிரசவமா? ஜிம்மில் ஒர்க்அவுட்... வைரலான வீடியோவின் உண்மை!

ஜிம்மில் ஹெவியாக ஒர்க்அவுட்... திடீர் வயிற்றுவலி... குறைமாத பிரசவம் என பரவும் தகவல்; சமந்தா விஷயத்தில் அப்படி என்ன நடந்தது?

என்னது சமந்தாவுக்கு குறைமாத பிரசவமா? ஜிம்மில் ஒர்க்அவுட்... வைரலான வீடியோவின் உண்மை!
சமந்தா ரூத் பிரபு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததில் இருந்தே அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்திலும் அவர் தொடர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

“கர்ப்பமாக இருக்கும்போது இவ்வளவு ஹெவியாக ஒர்க் அவுட் செய்யலாமா? குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடாதா?” என்று ரசிகர்கள் சிலர் கவலைப்பட்டனர். இதற்கு சமந்தாவே விளக்கம் கொடுத்திருந்தார். பல ஆண்டுகளாக தான் வெயிட் லிஃப்டிங் செய்து வருவதாகவும், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிவித்திருந்தார். எனவே, தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பதையும் சூசகமாகச் சொல்லியிருந்தார்.

இப்படியிருக்க, இப்போது சமந்தாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அதிலும், குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்ததால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. அவ்வளவுதான்... சமந்தா ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறிவிட்டது. ஆனால், அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் உண்மை இல்லை. சமந்தாவுக்கு இதுவரை பிரசவம் நடைபெறவில்லை. தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கணித்துள்ள பிரசவ காலம் டிசம்பர் மாதம் என கூறப்படுகிறது. அதனால், “ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ததால் குறைமாதப் பிரசவம்” என்ற கதைக்கும் அடிப்படை இல்லை.

இதற்கிடையே சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் அவர் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகளுடன், தனது கணவர் ராஜ் நிடிமொருவுடன் பிக்கில் பால் விளையாடும் வீடியோவும் இடம்பெற்றிருந்தது.

“நீங்க என்ன இப்படி தைரியமாக விளையாடுறீங்க... எங்களுக்கு தான் பக்கு பக்குனு இருக்கு!” என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

சமந்தாவின் கர்ப்ப அறிவிப்பும் ஏற்கெனவே ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியிருந்தது. குழந்தை பிறக்கும் வரை நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த கர்ப்பம் தங்களுக்கே எதிர்பாராத சர்ப்ரைஸ் எனவும் சமந்தா கூறியிருந்தார்.

சமந்தாவின் ரசிகர்களே... வைரல் வீடியோவை பார்த்து பதற வேண்டாம். குறைமாதப் பிரசவம் நடந்துவிட்டது என்ற தகவல் போலியானது. சமந்தா இன்னும் கர்ப்பமாகவே இருக்கிறார்.