Yuvan Shankar Raja : மரபிசையின் AI வெர்ஷன்... இளைஞர்களின் இசை மீட்பர்... HBD யுவன் சங்கர் ராஜா!

Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 18 வயதில் அரவிந்தன் படத்தில் தொடங்கிய யுவனின் இசைப் பயணம், தற்போது GOAT-ஆக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இசைஞானி வழியில் மரபிசையின் ஏஐ வெர்ஷனாக வலம் வரும் யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

Aug 31, 2024 - 06:01
Aug 31, 2024 - 18:34
 0
Yuvan Shankar Raja : மரபிசையின் AI வெர்ஷன்... இளைஞர்களின் இசை மீட்பர்... HBD யுவன் சங்கர் ராஜா!
Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil

Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : அன்னக்கிளி படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளையராஜா, இசையுலகில் தனக்கென ஒரு ராஜாங்கத்தையே கட்டமைத்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த ராஜாங்கத்தின் இளைய இசைக்கீற்று யுவன். இசைஞானியின் இளவளாக யுவனை இப்படிச் சொன்னாலும், திரையிசையில் அவர் செய்த ஜாலங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவையனைத்தையும் முத்துக்களாக கோர்த்தாலும், அதன் அதிசயங்களை சொல்லி முடிவதற்கில்லை. இசைஞானி ஒருபக்கம், அவரது சிஷ்யனாக இசைப்புயல் மறுபக்கம், இவர்களுடன் தேனிசைத் தென்றல் உட்பட மேலும் பல ஜாம்பவான்கள் கோலிவுட் ரசிகர்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர்.        

திரையிசையில் இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்க, இதன் எந்த வகைமைக்குள்ளும் சிக்காமல் தன்னந்தனியே ஒரு இசைத் தீவை கட்டமைத்தார் யுவன். இதில் இளையராஜாவின் மரபிசைக்கும் பஞ்சம் இருக்காது... ஏஆர் ரஹ்மான் செய்துகாட்டிய புதுமைகளிலும் மிச்சம் இருக்காது. திசை எட்டிலும், புத்தாயிரம் இறக்கைகள் கட்டி உயரே பறந்த யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக சிறகடிக்கத் தொடங்கினார். யுவனின் இசை மனதின் இறுக்கங்களை தகர்க்கும் என்றால், அவரது குரலோ ரசிகர்களுடன் உரையாடத் தொடங்கியது. 

யுவனின் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களை வசியம் செய்துவிடும். ராகம், தாளம், ஹம்மிங், பாடல் வரிகள் என ஒவ்வொன்றிலும் கேட்பவர்களை கிறங்கடிக்காமல் கைவிட மாட்டார் யுவன். ’இரவா பகலா’ (பூவெல்லாம் கேட்டுப்பார்) என காதலர்களை ஏங்க வைத்த யுவனால், அவர்களை ‘தீண்டத் தீண்ட’ (துள்ளுவதோ இளமை) பாடல் மூலம் காதலை மிதமிஞ்சி அள்ளிப் பருகிடச் செய்யவும் முடியும். தோல்வியையும் விரக்தியையும் ‘தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்’ (காதல் கொண்டேன்) என கொட்டித் தீர்க்கவும் சரி, அதிலிருந்து விடுபட்டு ’மச்சி ஓபன் தி பாட்டில்’ என கொண்டாடி மகிழவும் சரி, யுவனின் சேவை இளைஞர்களுக்கு தேவையாக இருந்தது.  

யுவனின் ட்யூனுக்கு நா முத்துக்குமார் உதிர்த்த பாடல் வரிகள் எல்லாம் ரசிகர்களுக்கு வாழ்நாள் இசை ஆசிர்வாதம் எனலாம். யுவன் – நா முத்துக்குமார் கூட்டணியை மறந்தால், அவர்கள் இசை ரசிகர்களே இல்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதேபோல், யுவன் – செல்வராகவன், யுவன் – வெங்கட் பிரபு, யுவன் – ராம், யுவன் – அமீர், என இக்கூட்டணியில் வெளியான படங்களும் அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் ராஜாதி ராஜாவாக கலக்கி வரும் யுவன், ஆல்பம் எனப்படும் தனியிசைப் பாடல்கள் கம்போஸ் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இதோ அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஜய்யின் கோட் படத்தில் யுவனின் இசைக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தில் இருந்து இதுவரை வெளியான பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்திருந்தாலும், பின்னணி இசையில் யுவன் தெறிக்கவிடுவார் என்றே ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ‘யுவன்’ என்ற இந்தப் பெயர் இடம்பெறாமல், தமிழ்த் திரையிசையின் எத்திசையும் இயங்காது என்பதே மறுக்க முடியாத உண்மை. மரபிசையின் ஏஐ வெர்ஷனும் இளைஞர்களின் இசை மீட்பருமான யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது குமுதம் 24/7.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow