தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மார்ச் 5-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தொகுதி மறுவரையால் பாதிக்கப்படும் ஏழு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.
அதாவது, தொகுதி மறுவரையறை பற்றி விவாதிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அந்த கூட்டத்தில் அந்தந்த தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்கள் குழு அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து 22-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் வழங்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (மார்ச் 12) ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரை நேரில் சந்தித்து தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, நேற்று (மார்ச் 11) ஒடிசா சென்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
Read more:-
தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு
கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்
What's Your Reaction?






