Vaazhai Box Office Collection Day 3 Report : மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாழை திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அதன்படி, அவரது ஆட்டோ பயோபிக் மூவியாக வெளியான வாழை, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே ஏராளமான திரை பிரபலங்கள் வாழை படத்தை பாராட்டியிருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில், பகுதி நேரமாக வாழை தார் சுமக்கும் வேலையை பார்த்து வந்தார் மாரி செல்வராஜ். அப்போது அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பை, சம்படி ஆட்டம் என்ற பெயரில் தொடராக எழுதியிருந்தார். அதுவே தற்போது வாழை என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் மாரி செல்வராஜ், அவரது நண்பர் ஆகியோரது கேரக்டரில், இரண்டு சிறுவர்கள் நடித்துள்ளனர். அவர்கள் இருவருமே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ரசிகர்களாக நடித்திருந்தனர். இந்த காட்சிகளும் டீச்சராக வரும் நிகிலா விமல் நடித்த காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், பா ரஞ்சித், மணிரத்னம், மிஷ்கின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.
முக்கியமாக வாழை படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் மாரி செல்வராஜ் எல்லோரையும் அழ வைத்துவிட்டார். இப்படி விமர்சன ரீதியாக ரசிகர்கள் கொண்டாடிய இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. முதல் நாளில் வாழை திரைப்படம் 1.5 முதல் 2 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்துள்ளது. அதாவது இரண்டாவது நாளில் வாழை படத்துக்கு ஸ்க்ரீன்கள் அதிகப்படுத்தப்பட்டதால், அன்றைய தினம் 2.5 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது. அதேபோல், மூன்றாவது நாளிலும் வாழை படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஞாயிற்றுக் கிழமையான நேற்று 4 முதல் 5 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளது.
அதன்படி, வாழை ரிலீஸாகி முதல் மூன்று நாட்களில் 8 முதல் 9 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 12 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் வாழை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மாரி செல்வராஜ்ஜுக்கு லாபமாகவே அமைந்துள்ளது. அதேநேரம் வாழையுடன் வெளியான சூரியின் கொட்டுக்காளி படம் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். கொட்டுக்காளி சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரியளவில் கவனம் ஈர்த்ததால், இந்தப் படத்துக்கும் மாரி செல்வராஜ்ஜின் வாழைக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது.
மேலும் படிக்க - மூட்டை தூக்கி படிக்கும் கோவில்பட்டி மாணவன்.. உடனே உதவி செய்த விஜய்!
இதில் மாரி செல்வராஜ்ஜின் வாழை படம் தான் பாக்ஸ் ஆபிஸில் வின்னராக மாஸ் காட்டுகிறது. செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகிறது. அதுவரை வாழை படத்துக்கு திரையரங்குகளில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனிவரும் நாட்களிலும் இந்தப் படம் கலெக்ஷனில் தாறுமாறாக சம்பவம் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.