Jayakumar About Udhayanidhi Stalin : பா. சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. ஏமாற்றம் இருக்காது ஆனால் மாற்றம் இருக்கும் என்று அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கையில் செத்துப் பிழைக்கிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இதையெல்லாம் கொஞ்சம் கூட தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கிறார்.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடக்கிறது. விலைவாசி ஒருபுறம் உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படவில்லை. இந்த எண்ணம் எல்லாம் இல்லாமல், மு.க.ஸ்டாலின் அவரது அப்பாவுடைய புகழை பாடுவது, கருணாநிதி சிலையை நிறுவுவது என மூன்று வருடங்களாக இந்த வேலைய தான் பார்த்துக்கொண்டிருக்கிறார். அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க அப்போது எதற்கு அம்மா உணவகம்? என்று பேசியிருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது செத்துப்போன கருணாநிதிக்கு எதுக்கு ரூ. 80 கோடி செலவில் நினைவிடம் வைக்கிறார்கள்?
திமுக சங்கர மடம் இல்லை வாரிசு அரசியல் செய்வதற்கு என்று கருணாநிதி அந்தக் காலத்தில் சொன்னார். ஆனால் அவர் ஸ்டாலினை சிறுக சிறுக கொண்டு வந்தார். வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளாக உதயநிதியை துணை முதல்வர் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்பும் வேலையை மு.க.ஸ்டாலின் பார்த்து வருகிறார். திமுகவில் பல மூத்தவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்காக உழைத்து மாடாகத் தேய்ந்திருக்கிறார்கள். உதயநிதிக்கு துணை முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவில் வேறு யாருக்கும் தகுதி இல்லையா?
மேலும் படிக்க: கதறி அழுத பிரியங்கா.. மணிமேகலை பிரச்சினையை பேசி தீர்க்கலாமே.. பஞ்சாயத்துக்கு வந்த வனிதா
உதயநிதியை துணை முதல்வராகக் கொண்டு வருவதன் வெளிப்பாடாகதான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உதயநிதியை முதல்வராகக் கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெற்று வருகிறது. நரி வலது பக்கம் போனால் என்ன? இடது பக்கம் போனால் என்ன? நாட்டிற்கு ஒன்றும் நடக்காது” என விமர்சித்துள்ளார்.