Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது அடுத்த படைப்பான வாழை கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதனால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான ரசிகர்கள் வாழை படத்தை ரொம்பவே நெகிழ்ச்சியாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் கதை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த சாகித்ய அகடாமி விருது வென்ற எழுத்தாளர் சோ தர்மனின் முகநூல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள், உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழை தான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும்போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள் அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்." என்னை வாழை வாழ வைக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்.
இது ஒருபக்கம் வைரலாகி வரும் நிலையில், இன்னொரு பதிவும் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் வாழை படம் வெளியாகி பரபரப்பாகி பலராலும் பேசி புகழ்ந்து வருகின்றனர். உன்மைச் சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இயக்குநர் மாரி செல்வராஜ்ஜிடம் மேலோங்கி நிற்கிறது. இச்சம்பவம் நடைபெறும் போது எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்திற்குச் சென்று விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு, எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில்.
இரவு தொழுகையை முடித்துவிட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த லாரியின் ஓட்டுநர் வேகமாக வந்தார். (அப்போ மொபைல் வசதி கிடையாது, எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளருக்கு போன் செய்து, ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார். பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள், பள்ளிவாசலில் தொழுகை வைக்கும் இமாம் ஆகியோர், டார்ச் லைட், மறைந்த சைக்கிள் கடை ஆப்தின் கடையில் இருந்த பெட்ரோமக்ஸ் லைட் போன்றவற்றை கொண்டு சென்று கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு.
பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவிபுரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர். ஆனால் இயக்குநர் மாரி செல்வராஜ் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த பேட்மாநகரம், முத்துசாமிபுரம், பேரூர் ஊரின் பெயர்களை மறைத்துவிட்டு, அவர்கள் உதவி, உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ளார். மேலும் கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளியே தெரிந்துவிடக்கூடாது எனறு மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்.
மேலும் படிக்க - வாழை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்
உண்மைச் சம்பவம் என்றால் உண்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும். ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குநர் என்று எப்படி கூறமுடியும்?” என்ற முகநூல் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?