“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Aug 9, 2024 - 21:05
 0
“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!
பா ரஞ்சித் கண்டனம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் பெரம்பூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த், கோபிநாத், நிதித்சிங், இயக்குநர் பா ரஞ்சித், நடிகர் தீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறைந்த ஆம்ஸ்ட்ராங் உருவம் பதித்த முகமூடி அணிந்து, அவரது படுகொலைக்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிராக நீதி வேண்டும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கை நினைவு கூறும் விதமாக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் மேடையில் பேசினார்.

“ஆம்ஸ்ட்ராங் வெற்றியை தடுக்க வேண்டும் என திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பல ரவுடிகள், அரசியல் சக்திகள், அரசியல் தாதாக்கள் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர். தலித் மக்களை ஒன்றிணைத்து வெற்றியை நோக்கி சென்றவரை கொலை செய்துவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் இறக்கவில்லை, மக்களிடம் விதைக்கபட்டிருக்கிறார்” என தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்ற நிலையில் விரைவில் ஐநா சபைக்கு செல்லும் என்றார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் பற்றி, பத்து நாட்களில் ஐநா சபையில் பேச வைப்பென் எனவும், 6 மாதங்களாக திட்டம் தீட்டி அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். விசாரணையில் தொய்வு ஏற்பட்டால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் அரசியல் புள்ளிகள், குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் தீனா, “நமக்கு விடுதலை கிடைக்காமல் அடிமைகளாக உள்ளோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி ரவுடி என்ற பட்டம் பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அவர் ரவுடி இல்லை புரட்சியாளர். சமத்துவ நாயகன் ஆம்ஸ்ட்ராங்கை சாதிய தலைவனாக மாற்றி விட்டார்கள். சாதியை ஒழிக்க புறப்பட்டுவிட்டது இந்த யானை, தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். 2026 தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங் சட்டமன்றம் செல்வார்” என தெரிவித்தார். இதனையடுத்து இயக்குநர் பா ரஞ்சித் பேசினார்.

மேலும் படிக்க - கூலிப்படை தலைவனின் உதவியோடு ரவுடி சம்போ செந்தில் தலைமறைவு? 

அப்போது, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இது முதல் மேடை, அவர் தனது மகளுடன் தொலைதூர நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமான பார்வைகளில் சென்றுள்ளது. அவருடைய பேச்சுக்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இறப்பிற்கு பிறகும் ஆம்ஸ்ட்ராங்கை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். காவல்துறை இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார்கள், ஆனால் நாம் சண்டை போட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்து வருகிறோம். தொடர்ந்து அழுத்தம் தந்ததால் ஒவ்வொரு நபர்களாக கைது செய்து வருகிறார்கள்” என்றார். 

மேலும், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலிருந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர், அண்ணனுடன் இருந்த நபர்களே இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இது ஒரு உண்மையான அரசியல் படுகொலை. தமிழக அரசை நாம் பயப்படுத்தி வைத்திருக்கின்றோம். அதுதான் நிதர்சனம், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்களது போராட்டங்கள் தொடரும். போலீசாரின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அது எப்போது எங்களுக்கு திசை மாறுகிறதோ, அப்போது அதனை எந்த இடத்திற்கும் வேண்டுமானாலும் கொண்டு செல்வோம். ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்ட அரசியல் படுகொலை” எனக் கூறினார்.  

மேலும், “தலித் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லயென்றால், நம்மளையே ஒருவருக்கு ஒருவர் எதிரியாக மாற்றி விடுவார்கள். நாம் ஒன்றிணைந்து இந்த வழக்கை சரியான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு அழுத்தத்தை உருவாக்க வேண்டும், அப்படி கொடுத்துவிட்டால் வெற்றி பெறலாம். அரசுக்கும் காவல்துறைக்கும் நம் மீது ஒரு பயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், “தமிழக அரசுக்கு வலுவான கண்டன குரலை பகுஜன் சமாஜ் கட்சியினர் எழுப்பியுள்ளோம். காவல்துறையினர் கொலை விசாரணையில் தற்போது கழுத்து வரை தான் வந்துள்ளனர். ஒரு சில தினங்களில் காவல்துறையின் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.” 

“காவல்துறை விசாரணையில் தொய்வு ஏற்பட்டால் மத்திய தலைமை கூறும் அறிவுரைப்படி செயல்பட உள்ளோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் முறைப்படி படித்து பட்டம் பெற்றவர்கள் இல்லை. வெளி மாநிலங்களில் படித்துவிட்டு வந்ததாக கூறி வழக்கறிஞராக செயல்பட்டவர்கள்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow