ஜப்பானிய பாரம்பரியத்துடன் காமிக்ஸ் கதைகளை சொல்லும் முறைகளில் புகழ்பெற்றது மங்கா. ரியோ தட்சுகி அடிப்படையில் ஒரு மங்கா கலைஞர். இவர் உலகப்புகழ் பெற காரணமாக இருந்தது காமிக்ஸ் கதைக்களுக்காக மட்டுமல்ல, அவரது துல்லியமான கணிப்புகளுக்காகவும் தான்.
இந்நிலையில் தான், ஜூலை 2025-ல் மிகப்பெரும் பேரழிவை உண்டாக்கும் வகையிலான சுனாமி ஏற்படும் என ”The Future I Saw” என்கிற தனது புத்தகத்தில் கணித்துள்ளார்,தட்சுகி. ஜப்பானுக்கு தெற்கே கடல் "கொதிப்பதாக” கனவு கண்டுள்ளார். நீருக்கடியில் எரிமலை வெடிப்பின் அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா மற்றும் ஜப்பானின் கடற்கரையோரங்களின் சில பகுதிகள் இந்த சுனாமியினால் பாதிக்கப்படலாம். அவரது கனவில், வடக்கு மரியானா தீவுகள், ஜப்பான், தைவான் மற்றும் இந்தோனேசியாவை இணைக்கும் வைர வடிவப் பகுதியில் பேரழிவின் அபாயம் குறித்து கனவு கண்டுள்ளார்.
தட்சுகியின் துல்லியமான கணிப்புகள்:
குயின் இசைக்குழுவின் முன்னணி பாடகரான ஃப்ரெடி மெர்குரியின் மரணம் குறித்து, 1995-ல் கோப் பூகம்பம் பற்றி மற்றும் 2011-ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவை குறித்தும் அவர் முன்னரே கணித்திருந்தார். அதன்படியே பேரழிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தட்சுகி தனது கனவுகளை அடிப்படையாகக் கொண்ட ” The Future I Saw” (நான் பார்த்த எதிர்காலம்) என்ற மங்கா காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். அவரது முந்தைய கணிப்புகள் அப்படியே நிறைவேறியுள்ளதால் அவரது படைப்புகள் தற்போதும் ஆன்லைன் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.
தற்போது 2025 ஜூலையில் சுனாமி வரும் என தட்சுகி கணித்துள்ளார். இவரது முந்தைய கணிப்புகள் போல், சுனாமி இந்த வருடம் வருமா? என அச்சப்படத் தொடங்கியுள்ளனர் ஜப்பானியர்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்த ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தற்போது வரை எதுவும் இல்லை. இருப்பினும், பசிபிக் வளையத்தின் மேற்கு விளிம்பில் ஜப்பான் இருப்பதால், அந்த நாட்டில் நிலநடுக்கங்களும் சுனாமிகளும் அடிக்கடி ஏற்படுவதால், ஜப்பான் மிகவும் ஆபத்தான பகுதியில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
தட்சுகியின் கணிப்புகள் முற்றிலும் அவரது கனவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், அவற்றுக்கு அறிவியல்பூர்வமான ஆதரவு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.