தமிழ்நாடு

TTF வாசனுக்கே டஃப் கொடுக்கும் இர்ஃபான்... மீண்டும் மீண்டும் மன்னிப்பு... எங்க போயி முடியப்போகுதோ?

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

TTF வாசனுக்கே டஃப் கொடுக்கும் இர்ஃபான்... மீண்டும் மீண்டும் மன்னிப்பு... எங்க போயி முடியப்போகுதோ?
TTF வாசனுக்கே டஃப் கொடுக்கும் இர்ஃபான்... மீண்டும் மீண்டும் மன்னிப்பு... எங்க போயி முடியப்போகுதோ?

உணவு ரிவ்யூக்கள், கேட்ஜெட் ரிவ்யூக்கள், பிரபலங்களுடன் Fun நேர்காணல்கள் என படுபிசியாக இருப்பவர் பிரபல யூடியூபர் இர்ஃபான். தமிழ்நாட்டில் நேற்று பிறந்த குழந்தைக்கு கூட யூடியூபர் இர்ஃபான் என்றால் யாரென்று தெரியும் அளவிற்கு சோஷியல் மீடியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் அவ்வப்போது தனது வீட்டில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை Vlog-ஆகவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முதலில் எல்லாம் பிறந்தநாள் கொண்டாட்டம், சிக்கன் செய்வது எப்படி போன்ற Vlog-கள் பதிவிட்டு வந்த இவர், தற்போது தனக்கு குழந்தை பிறந்ததைக் கூட வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

அண்மையில் யூடியூபர் இர்ஃபான் ஓட்டிச் சென்ற கார், ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார். இருந்தாலும் இர்ஃபான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அன்று முதல் சர்ச்சைகளில் வரிசையாக சிக்கத் தொடங்கினார் இர்ஃபான். இதனையடுத்து அவர் ஆஹா... ஓஹோ... என ரிவ்யூ கொடுத்த ஒரு தள்ளு வண்டி உணவுக் கடையில் சுகாதாரமில்லை என்ற புகார் எழுந்து 2ம் சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து பிறக்கப்போகும் தனது குழந்தையின் பாலினத்தை கருவிலிருக்கும்போதே கண்டறிந்து வீடியோவாக பதிவிட்டிருந்தார். இது இந்தியா முழுவதும் பேசு பொருளானது. காரணம் குழந்தை பிறக்கும் முன்னே பாலினத்தை கண்டறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். அதனால் இர்ஃபான் துபாய் சென்றபோது அங்குள்ள மருத்துவமனையில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கொண்டாடும் விதமாக அவர் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில் அதனை உடனடியாக நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தபோதிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பலவித கருத்துகளும் கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன. 

இர்ஃபானுக்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பழக்கம் இருப்பதால்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் இருந்து வருகிறது. இந்த பிரச்சனை ஓயும் முன்பே தற்போது ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளார் இர்ஃபான். மருத்துவமனையில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் தன் கையால் வெட்டும் காணொளியை யூடியூபில் பதிவிட்டிருந்தார். இது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதெப்படி முருகேஷா? இந்தியாவுல எதையெல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் லிஸ்ட் போட்டு இந்த இர்ஃபான் பண்றாரு? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்து எடுத்து வந்தனர். மேலும் இந்த காணொளியை பதிவிட்டதற்காக இர்ஃபான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாகவே தெரிவித்துள்ளார் இர்ஃபான். அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும், தனது மனமார்ந்த மன்னிப்பையும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த கடிதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சினிமா பிரபலங்கள் கூட இந்த காலத்தில் அவ்வளவாக சர்ச்சையில் சிக்குவதில்லை. ஆனால் இந்த யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் Influencer-களின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. கடந்த சில மாதங்கள் முன்பு வரை சர்ச்சை நாயகனாக இருந்த டிடிஎஃப் வாசனுக்கே தற்போது டஃப் கொடுத்து வருகிறார் இர்ஃபான். இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ தெரியவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.