தமிழ்நாடு

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!
சென்னையில் இரவு பெய்த கனமழையால் மேகவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டதாகவும், மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே மணி நேரத்தில் 10 செ.மீக்கு மேல் மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்

மழை அளவு விவரங்கள்:

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து,

விம்கோ நகர் - 23 செ.மீ

கொரட்டூர் - 18 செ.மீ

கத்திவாக்கம் - 14 செ.மீ

திருவொற்றியூர் - 13 செ.மீ

கொடுங்கையூர் - 13 செ.மீ

பல்லாவரம் - 12 செ.மீ

தியாகராய நகர் - 12 செ.மீ

எனப் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

மேகவெடிப்பு காரணம்:

சென்னையில் இந்த ஆண்டில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை பெய்துள்ளது" என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இரவு 11 மணியளவில் மழை தொடங்கிய நிலையில், வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ-க்கு மேல் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கப்பட்டது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல் மற்றும் நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தத் திடீர் மற்றும் வலுவான மழையின் காரணமாக, பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மழையின் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், மழை நின்றதும் இயல்பு நிலை படிப்படியாகத் திரும்பி வருகிறது.