தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தீர்ப்பு!
Thiruparankundram Deepathoon case
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கவுள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் விசாரணை

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் கே.கே. ராமசந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை 5 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றது.

நாளை தீர்ப்பு

நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

மேலும், எழுத்துப்பூர்வமான வாதங்களை டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்புக்காகத் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கே.கே. ராமசந்திரன், ஜெயச்சந்திரன் அமர்வு நாளை (ஜனவரி 6) வழங்க உள்ளது. நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் முன்னெச்சரிக்கையாகப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.