தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விலை ஏற்றத்திற்கான காரணம் குறித்தும், தங்கத்தின் மீதான சேமிப்பு குறித்தும் குமுதம் செய்திகளுக்கு சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொது செயலாளர் சாந்தகுமார் பிரத்யேக பேட்டி அளித்தார்.
இது குறித்து பேசியுள்ள சாந்தகுமார், “தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரவே வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை, ரஷ்யா உக்ரைன், ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மேலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 0.5% என்ற அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் தங்கத்தின் பக்கம் முதலீடுகளை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட், நிதி நிருவனம், மற்றும் பங்குச்சந்தை ஆகிய துறைகள் சற்று ஏற்றத்தாழ்வுடன் காணப்படுவதாலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும் சேமிப்புக் கருதி பொதுமக்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை செலுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான ஒரு ஆண்டில் 41% லாபம் தங்கத்தின் மீது மட்டுமே கிடைத்துள்ளது. இதேபோன்று கடந்த ஒரு ஆண்டில் வெள்ளியில் 54% லாபம் கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க கூடும். மேலும் தீபாவளியை தொடர்ந்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றமாகவே காணப்படும்.
தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பே இல்லை. தங்கத்தின் விலை குறைந்த பிறகு தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று மக்கள் நினைப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.