தமிழ்நாடு

சீமான் தலை துண்டாகும்..வீர வசனம் பேசிய நபர் அதிரடி கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சீமான் தலை துண்டாகும்..வீர வசனம் பேசிய நபர் அதிரடி கைது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடந்த 28-ஆம் தேதி சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இதுத்தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இடும்பாவனம் கார்த்திக் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில், 'சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், விரைவில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி அதிவிரைவில் வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள்’ என பதிவிட்டப்பட்டுள்ளது.

மேலும், ‘தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே. அதன் விளைவு மரணம்' என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்கு மக்கள் குறித்தோ மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதூறாகவோ பேசியது கிடையாது. மாறாக நாம் தமிழர் கட்சியில் தெலுங்கு இன மக்கள் உட்பட பல தேசிய இன மக்கள் உறுப்பினர்களாகவும், பல முக்கிய பொறுப்பாளராகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ள சந்தோஷ் உள்பட 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.