தமிழ்நாடு

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை மழை - வெதர்மேன் அப்டேட்

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, முதல் நாளிலேயே மழை ருத்ரதாண்டவம் ஆடியது. சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை உட்பட ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே, சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையேயும், சென்னையின் வடக்கு பதியிலும் கரையை கடந்தது. 

மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியின் மேல் தற்போது நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வெயில் அடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஆனால், வெப்பச் சலனம் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இது சாதாரணமான மழையாக மட்டுமே இருக்கும் என்றும், பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு கனமழையாக இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதனையடுத்து நிம்மதியான சென்னை மக்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில் பிஸியாகிவிட்டனர். கடந்த இரு தினங்களாக மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நண்பகலுக்குப் பின்னர் சென்னையில் எந்தப் பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பதால், தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் மழைநீர் முழுமையாக அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப்பணி தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கனமழை குறித்த அலர்ட் பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மக்களின் ஒத்துழைப்போடு அதனை எதிர்கொண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப்பணியை தொடர்ந்திடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.