Minister Udhayanidhi Stalin Request Teacher : 2023 - 2024ம் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சிபெற்ற தனியார் பள்ளிகள் மாறும் சர்வதேச - தேசிய - மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''பதக்கங்களை வென்ற மாணவ-மாணவிகளுக்கும், 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கும் மாணவனை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
மாணவிகள் பள்ளிக்கு நடந்து போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் பெரியார். மாணவிகள் பள்ளிக்கு நடந்து போகக் கூடாது என்று பஸ் பாஸ் கொடுத்து பேருந்தில் போக வைத்தவர் கலைஞர். பெரியாருக்கும், கலைஞருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் எங்கள் அத்தனை பேருக்கும் ஏற்படுகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். அதற்கான அத்தனை வசதிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
பாடத்தில் உள்ளதை மட்டும் மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். விரைவில் கோவையிலும் திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது. ஆர்.டி.ஐ சட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதன் முறையாக 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்தது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி வறுமையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு உடற்பயிற்சி விளையாட்டு முக்கியம். ஆகவே ஆசியர்கள் விளையாட்டுப் பீரியடை கடன் வாங்கி வேறு வகுப்பை நடத்த வேண்டாம் என்று மீண்டும் வேண்டுகோள் வைக்கிறேன்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.