சென்னை: கடந்த சில தினங்களாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிகாலை வரையிலும் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால், சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரடியாக சென்று பார்வையிட்டார். கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறின. விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு, குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். விஜயவாடாவின் மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது, அங்கு திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பாக நின்ற பின்னர் ரயில் அவர்களை கடந்து சென்றது. இதனிடையே ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.