தமிழ்நாடு

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!
Success Story of Groundnut farmer Neelaveni
கரூர் அருகே குரும்பபட்டி கிராமத்திலுள்ள இவர்களது தோட்டம் நல்ல மேட்டுப்பகுதியில் இருக்கிறது. 'மேட்டாங்காட்டை போட்டவனும் கெட்டான், மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்'னு பழமொழி இருக்குது. இந்த மேட்டுகாட்டுல எப்படி விவசாயம் உங்களுக்கு கை கொடுக்கிறது என்று நீலவேணியிடம் நேர்காணல் மேற்கொண்டது குமுதம் மண்வாசனை குழு.

"மேட்டாங்காட்டையும் சமமாக்கி, உண்மையாக உழைத்தால் மேட்டாங்காட்டிலும் காசு சம்பாதிக்கலாம். நிலத்தைச் சமன்படுத்தி தோட்டமாக்கியிருக்கிறோம். அதனால் இந்தப் பூமியில் விவசாயம் செழிக்கிறது” என்று சொன்ன நீலவேணி,

"நான் மூன்று மாத பயிரை வருடத்திற்கு மூன்று போகமாகப் பயிரிடுவேன். இரண்டு ஏக்கர் நிலத்தில் கடலை, சோளம், கம்பு, சூரியகாந்தி, வெங்காயம், மிளகாய், ஆகிய பயிர்களை மட்டுமே பயிரிட்டு ஒரு போகத்திற்கு 2 ஏக்கரில் 80 ஆயிரம் சம்பாதிப்பேன்" என்றவர், "இப்போது ஒரே நேரத்தில் கடலை போட்டிருக்கிறேன்” என்று கடலை விவசாயத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.”

கடலைக்கு ஏற்ற செம்மண்:

"இந்த செம்மண்ணில் கடலை போட்டால் கொத்துக் கொத்தாக காய் பிடிக்கும். மானாவாரியிலேயே விளையும் கடலைக்கு கிணற்றுத் தண்ணீர் பாய்ந்தால் எப்படி விளையும் என்று கண்ணாலேயே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று தன் தோட்டத்து கடலை செடியைக் காட்டியவர்,

"இந்த சித்திரை, வைகாசி மழைக்கு கடலை நன்றாக விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு கடலை போட்ட விவசாயிகள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். நான் என் நிலத்தை மூன்றுமுறை உழவு ஓட்டுவேன். மணல் கட்டிகள் உடையும் வரை உழவு ஓட்டினால் ரொம்ப நல்லது. பிறகு தொழு உரம் போட்டு நிலத்தை மீண்டும் உழுதால் மேலும் மணல் சத்துள்ளதாக மாறிவிடும். பிறகு விதைக்கடலை கிலோ 120 ரூபாய்க்கு ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம், பழனி, தாராபுரம் ஆகிய ஊர்களில் கிடைக்கிறது. நான் இந்த விதை கடலையை பழனியில் வாங்கி வந்தேன்.”

Image

ஏக்கருக்கு 60 கிலோ விதைக்கடலை:

”ஒரு ஏக்கர் நிலத்திற்கு 60 கிலோ விதைக் கடலை தேவைப்படும். 4 ஆட்கள் ஒரு நாளிலேயே கடலை விதையைக் கொத்துவெட்டி கொண்டு விதை தூவுவார்கள். ஆனால், நானும் என் கணவரும் கூலிக்கு ஆள் விடாமல் 2 நாளில் நாங்களே விதையை விதைத்துவிடுவோம். வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியில் விதை நடவேண்டும். இப்படி நட்ட விதைக்கு ஒரு தண்ணீர் விடவேண்டும். பிறகு 4 நாட்களுக்கு ஒரு முறை நிச்சயம் தண்ணீர் விடவேண்டும். மழை வந்தால் தண்ணீர் விடத் தேவையில்லை. ஒரு ஏக்கர் நிலத்திற்கு களை எடுக்க, நான்கு ஆட்கள் ஒரு நாள் வேலை செய்தால் களை முழுவதையும் பறித்துவிடுவார்கள். ஆனால் களை எடுக்கவும் ஆள் விடமாட்டோம், நாங்களே களை எடுத்துவிடுவோம், விளைச்சல் கம்மியாக இருந்தால் யூரியா போடுவேன், இரண்டு மூட்டை யூரியா ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும்.”

”விதைத்த நாளிலிருந்து சரியாக 90 அல்லது 100-வது நாளில் செடியைப் பறிக்கலாம். அறுவடைக்கு காயைப் பறித்து பார்க்கும்போது பருப்பு முதிர்ச்சியாக இருக்க வேண்டும், மேல் தோலின் உள்ளே பருப்பு வெள்ளையாக இல்லாமல் சிவப்பாக இருந்தால் பருப்பு முதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். அறுவடை செய்த கடலையை 4, 5 நாட்கள் களத்தில் வெயிலில் உலர்த்த வேண்டும். ஒரு ஏக்கரில் 35 மூட்டை கடலை நிச்சயம் கிடைக்கும். ஒரு மூட்டைக்கு 40 கிலோ. அப்படி பார்த்தால் 35 மூட்டையில் ஆயிரத்து 400 கிலோ கடலை நிச்சயம் கிடைக்கும். கடலையை மூட்டையாகக் கட்டி செக்கு எண்ணை மில்லுக்கு அனுப்புவேன். இப்போது ஊர் ஊருக்கு செக் எண்ணை மில் அதிகம் இருப்பதால் நல்ல கடலை வைத்திருக்கும் விவசாயிகளிடம் அவர்களாகவே வந்து வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். இப்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கிறது.”

உற்பத்தி செலவு எவ்வளவு?

”இதற்காக செலவான தொகையை சொல்கிறேன் கேளுங்கள்... விதை பருப்பு, 7 ஆயிரம், உழவு ஓட்டியது ஒரு ஏக்கருக்கு உரம் மூவாயிரம் ரூபாய், அறுப்புக் கூலி 4 ஆயிரம், பூச்சி ஏதாவது இருந்தால் பூச்சி மருந்து மற்றும் இதர செலவுகள் 6 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆக மொத்தம் நாங்களே அனைத்து வேலையும் செய்தும் 20 ஆயிரம் செலவாகிவிடும். கடலை ஆயிரத்து 600 கிலோ. கிலோ 50 ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் வரும். வண்டி வாடகை செலவு மூவாயிரம் போக குறைந்தது நிச்சயம் 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். மகசூல் சரியில்லையென்றால்கூட நிச்சயம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு கடலை லாபம் 40 ஆயிரம் என்றால் 2 ஏக்கருக்கு 80 ஆயிரம் லாபம் கிடைக்கும்.”

”கடலை செடி ஆடுகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் தீனியாக இருப்பதால் இந்தக் கடலைச் செடியை போர்போல் அமைத்து வைத்துக்கொண்டு ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். அந்தக் கடலை கொடிகள் எப்படியும் 10,000 ரூபாய்க்கு விற்கும். அதனால் கடலை போட்டால் விவசாயிக்கு கவலை இல்லை' என்கிறார், நீலவேணி.

(கட்டுரை ஆசிரியர்: கரூர் அரவிந்த்/குமுதம் மண்வாசனை/01-05-2025)