தமிழ்நாடு

கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது!

கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாம் நிலைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது!
Policeman arrested for sexually assaulting a young woman in Karur
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில், இருசக்கர வாகனம் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, இரண்டாம் நிலைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி இரவு, தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக வாங்கிய மின்சார இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பழகிக்கொண்டிருந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு ரோந்து சென்ற பசுபதிபாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் பிரபாகரன் (வயது 35) மற்றும் அவருடன் இருந்த கெளதமன் (வயது 35) ஆகியோர் அவர்களை விசாரித்துள்ளனர். கெளதமன் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் நடவடிக்கை

விசாரணையின்போது, காவலர் பிரபாகரன் இருவரையும் தாக்கியதோடு, அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், அவருடன் இருந்த இளைஞரிடம் இருந்து ரூ.8,000 பணத்தையும் பறித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காவலரிடமிருந்து தப்பித்த இளம்பெண், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், நேற்று பணிக்கு வந்த காவலர் பிரபாகரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் தப்பி ஓடிய கெளதமனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.