BSP Armstrong Wife Porkodi : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரில் காவல் நிலையத்துக்கு அருகில் நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஆம்ராஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆனந்தன் அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைத் தலைவராக இமான் சேகரும், மாநில பொருளாளராக கமல்வேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி.ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவுக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் துணைவியார் பொற்கொடி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் எட்ட நினைத்த சமூகநீதி இலக்குகளை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.