தமிழ்நாடு

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?

இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?
one day auto strike

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத திமுக அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய விவரங்கள் பின்வருமாறு-

”வருகிற 19 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் ஆட்டோ ஓடாது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்பார்கள். CITU உள்ளிட்ட 11 சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொள்கிறது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.”

உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம்:

”தற்போது குறைந்தபட்சம் 25 ரூபாயும், ஒரு கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் என ஆட்டோ கட்டணம் உள்ளது. குறைந்தபட்சம் 50 ரூபாயும் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் என மீட்டர் கட்டணம் உயர்த்தி வழங்க திமுக அரசுக்கு அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.”

Read more: பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா? இந்த 5 அப்டேட் மறக்காம தெரிஞ்சுக்கோங்க..

”நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் மேஜையில் ஆட்டோ மீட்டர் கட்டண தொடர்பான ஆவணங்கள் கிடப்பில் கிடக்கிறது. அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காததால் தனியார் செயலிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்குவதோடு, ஓலா & யூபர் செயலிகள் போன்று அரசு பிரத்யேகமாக புது செயலியை அறிமுகம் செய்ய வேண்டும்.”

நாங்கள் என்ன குற்றவாளிகளா?

”ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை குற்றவாளிகளை போல சித்தரிக்கும் வகையில் (QR code ) QR குறியீடு ஆட்டோவில் ஒட்டும்  திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதால், இதனை தொழிலாளர்கள் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தொழிலாளி தான் சமூகத்தின் மீது அக்கறையானவன், என தானாக ஒட்டுவதற்கும், கட்டாயப்படுத்தி மிரட்டி ஒட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. 

திட்டம் சரியான நோக்கம் தான், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது தொழிற்சங்கங்களை முறையாக அழைத்து பேசியிருக்க வேண்டுமா? இல்லையா? ஆம்னி, கால் டாக்ஸி, பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்ட எந்த முயற்சியும் இல்லாமல் ஆட்டோ ஒட்டுநர்களை மட்டும் குறி வைப்பது ஏன்? மீட்டர் கட்டணம் தொடர்பான கோரிக்கை நிலுவையில் உள்ள போது, இதனை ஸ்கேன் செய்து எந்த பயணியாவது கூடுதல் கட்டணம் கேட்பதாக புகார் கொடுத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தான் அபராதம் வரும்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக வருகிற 19 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Read more: கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்