தமிழ்நாடு

சிறையில் கைதி தாக்குதல் விவகாரம்: டிஐஜி ராஜலெட்சுமி சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் கைதி தாக்குதல் விவகாரம்: டிஐஜி ராஜலெட்சுமி சஸ்பெண்ட்
சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலெட்சுமி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து சிவக்குமாரின் தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் நேற்று முன்தினம், விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.. இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.