தமிழ்நாடு

எஸ்.ஐ.ஆர் பணிகள்: எந்த படிவமும் நிராகரிக்கப்படாது- தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

"மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் பணிகள்: எந்த படிவமும் நிராகரிக்கப்படாது- தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
State Chief Electoral Officer Archana Patnaik
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர் சந்திப்பில் முக்கியத் தகவல்களை வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர். படிவங்களை வழங்க மேலும் கூடுதல் அவகாசம் இல்லை என்றும், வாக்காளர்கள் விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எஸ்.ஐ.ஆர். படிவ நிலையும் காலக்கெடுவும்

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேசுகையியல், "தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் தற்போது வரை 50 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதால், படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும்" என்று அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியல் மற்றும் சரிபார்ப்பு

மேலும் அவர், "வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், எஸ்.ஐ.ஆர். படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால், எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டால், அதற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படும். எஸ்.ஐ.ஆர். ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தைக் கொடுக்கிறார் எனில், அதை பி.எல்.ஓ.க்கள்தான் கண்டறிய முடியும்" என்றார்.

பணியாளர்கள் மற்றும் இதரத் தகவல்கள்

"எஸ்.ஐ.ஆர். பணியில் 33,000 தன்னார்வலர்கள் மற்றும் 88 ஆயிரம் பி.எல்.ஓ.க்கள் (பூத் லெவல் அதிகாரிகள்) ஈடுபட்டுள்ளனர். இதில், 327 பி.எல்.ஓ.க்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாகக் குற்றச்சாட்டு வைப்பது தவறானது. மேலும், தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்" என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.