தமிழ்நாடு

இரக்கமில்லாத பெற்றோர்.. குப்பையில் வீசிய குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.

இரக்கமில்லாத பெற்றோர்.. குப்பையில் வீசிய குழந்தையை கவ்விச் சென்ற நாய்!
Newborn Girl Child Found Abandoned in Ariyalur, Investigation Underway
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூரிலிருந்து, அசாவீரன் குடிகாடு செல்லும் சாலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.மாத்தூரிலிருந்து அசாவீரன் குடிகாடு செல்லும் சாலையில் வாகன ஓட்டி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, நாய் ஒன்று சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக் கொண்டிருந்ததை கண்டு வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது வாகன ஓட்டியை கண்டதும், குழந்தையின் உடலை கவ்விக் கொண்டு நாய் ஓடத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் நாயிடமிருந்து இறந்த நிலையில் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குவாகம் காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையின் பெற்றோர் யார்? இறந்த நிலையில் பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டதா? (அ) உயிருடன் குப்பைத் தொட்டியில் குழந்தை வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.