தமிழ்நாடு

வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் அலட்சியம் - மாற்றுத்திறனாளிகள் வேதனை

உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை

 வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் அலட்சியம் -  மாற்றுத்திறனாளிகள் வேதனை
உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 601 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் மூலமாக 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 20331 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 135 ரேஷன் கடைகளில், 49890 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், தாயுமானவர் திட்டத்தில் 5200 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், உத்திரமேரூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வீடுகளுக்கு சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தும், தாயுமானவர் திட்டத்தில் பெயர் சேர்க்க கூட்டுறவுத்துறையினர் தவறியதால் ரேஷன் பொருட்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் விசூர் கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வேல்முருகன் (40), அவரது மனைவி உமா (35), இவர் வாய்ப்பேசமுடியாத மாற்றுத்திறனாளி, இவர்களுக்கு சபரிணாதான் (13), மோழிவாசன் (10) என்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் வேதனை

இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இதனால் சுமார் 500 மீட்டர் தூரம் சென்று ரேஷன் கடையில் பொருட்களை பெற வேண்டிய சூழல் உள்ளது.இதனால் எங்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தாயுமானவர் திட்ட பயனாளிகள் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லாததால், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்க முடியாது என்று கூட்டுறவுத்துறையினர் கூறியதாகவும், இதுகுறித்து வேல்முருகன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளைடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தப்பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆட்சியருக்கு கோரிக்கை

எனவே எங்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளார்.