சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியானது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2025-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம்) சுகுமார் மற்றும் கூடுதல் ஆணையர் ( கல்வி ) ஹரிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும். தொன்று தொட்டு வந்த பழக்க வழக்கங்களை திடீரென்று உடைத்து விடக்கூடாது என முழு கவனத்தோடு இருக்கிறோம். ஜனவரி 2 மற்றும் 3-ஆம் தேதிக்குள் சுமூகமான சூழல் ஏற்படும் அனைவரும் மகிழ்ச்சி அடைய கூடிய முடிவு இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து, தேமுதிகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்ற பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு, திமுக பயப்படக்கூடிய கட்சியா? விஜயகாந்த் நல்ல கலைஞன், கலைஞர் கருணாநிதி மீது மாறா பற்று கொண்டவர். அவருக்கு அரசு முழு மரியாதை தந்தது. ஒரு சில சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்கள் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கு ஏற்ப குரு பூஜையில் குடும்பத்தோடு கலந்து கொண்டோம். பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதலமைச்சரை கடுமையாக விமர்சித்தார். அவருடைய 60-வது கல்யாணத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். விஜயகாந்த் மறைவின் நினைவு நாளில் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். கடந்து செல்வோம் அரசியல் ஆக்க வேண்டாம் என தெரிவித்தார்