இணைய வழி மூலம் பெண்களை ஏமாற்றும் நடவடிக்கை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மேட்ரிமோனி (matrimony) மூலம் மர்ம நபர்கள், பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் பெண்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார். இதுபோன்ற ஒரு சம்பவம் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி, கரையான்சாவடி பகுதியில் ஜெஸி என்ற பெண் வசித்து வருகின்றார். இவரிடம் கோயம்புத்தூரைச் சேர்ந்த லெனின் மோகன் என்பவர் தனியார் மேட்ரிமோனி (matrimony) மூலம் பழகி வந்துள்ளார். ஜெஸியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய லெனின் மோகன் அவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லெனின் மோகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் லெனின் மோகன் மதுபான விடுதிக்கு செல்வதற்கும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கும் பணம் தேவைப்பட்டால் இதுபோன்ற மேட்ரிமோனி (matrimony) வலைதளங்களில் பதிவு செய்துள்ள விதவை மற்றும் விவாகரத்தான பெண்களிடம் பேசி பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து வந்தது தெரியவந்தது.
இதேபோன்று தான் ஜெஸியிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று லெனின் மோகன் மோசடி செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் லெனின் மோகனை கைது செய்த போலீஸார் பெண்களை ஏமாற்ற அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, லெனின் மோகனை JM-1 பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். JM-1 பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் லெனின் மோகனை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.