தமிழ்நாடு

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு
ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார்.இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாய் கிரிஸில்டா எதிராக வழக்கு

அதில், நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
ஜாய் கிரிஸில்டாவின் இந்த செயலால் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு வணிக ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இந்த விவகாரத்தில் ஜாய் கிரிஸில்டா தங்களை தொடர்புபடுத்தி பேசியதால் 15 நாட்களில் பன்னிரெண்டரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல் ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு ஜாய் கிரிஸில்டா முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜாய் கிரிஸில்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் செல்ல விரும்பவில்லை எனக்கூறினார்.

மேலும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது எனவும் வாதிட்டார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறும் நிறுவனம் மாதம்பட்டி ரங்கராஜை பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே, தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் தனியாக ஒரு மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்குடன் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி வழக்கை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.