தமிழ்நாடு

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து
Valparai govt bus accident
இன்று (மே 18,2025) அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூர் பகுதியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் அரசு பேருந்தினை கணேஷ் (வயது 49) என்பவர் இயக்கி உள்ளார். நடத்துனர் சிவராஜ், டிரைவர் தவிர்த்து பேருந்தில் 72 பயணிகளுடன் வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தது பேருந்து.

அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, பேருந்து கட்டுப்பாட்டினை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில், 40 பேருக்கும் மேல் காயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வால்பாறை காவல்துறையினர், 108 ஆம்புலன்சின் உதவியுடன் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். இந்த கோரச்சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் கணேசன் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் 30-க்கு மேற்பட்ட பயணிகளுக்கு கை,கால்,தலை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அதிகாலை 3 மணியளவில் அரசு பேருந்து 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.