தமிழ்நாடு

குண்டர் சட்டம்: நீங்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காரணம் என்ன? அறிவுரை கழகம் என்பது என்ன? என்பது குறித்து கீழே பார்க்கலாம்!

குண்டர் சட்டம்: நீங்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!
குண்டர் சட்டம்: நீங்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

சட்டம்- ஒழுங்கை பேணிக் காக்கும் வகையில் தமிழக காவல்துறையால் 1982ஆம் ஆண்டு குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் மற்றும் கொடுங்குற்றங்கள் செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் போலீசாரால் போடப்படும். குண்டர் சட்டம் பாய்ந்தால் ஒரு வருடத்திற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படும். 

இந்த குண்டர் சட்டம் தவறான முறையில் கையாளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தான் மாநில உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 1982ஆம் ஆண்டு அறிவுரைக் கழகம் தொடங்கப்பட்டது. குறிப்பாக இந்த அறிவுரைக் கழகத்தில் குண்டர் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக உள்துறை அமைச்சகத்தால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் தலைமையில் செயல்படுகிறது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் கொண்டு அறிவுரைக் கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 40 குண்டர் சட்ட வழக்குகள் அறிவுரைக் கழகம் மூலமாக விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் போலீசாரால் பதியப்படும் குண்டர் சட்டத்தினை 45 நாட்களுக்குள் அறிவுரைக் கழகம் விசாரித்து, அதிகபட்சம் அடுத்த 10 நாட்களுக்குள் குண்டர் சட்டம் உறுதிப்படுத்தப்படுகிறா அல்லது ரத்து செய்யப்படுகிறதா என்ற விவரங்களை சீலிட்ட கவரில் மாநில உள்துறை அமைச்சக்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை.

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சட்ட ரீதியாக அணுகி குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பை அறிவுரைக் கழகம் வழங்குகிறது. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் நபர்கள் இந்த அறிவுரைக் கழகத்தை அணுகி தரப்பு வாதத்தை முன்வைக்கலாம். இந்த அறிவுரைக் கழகத்தில் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படமாட்டாது. குண்டர் சட்டம் பாய்ந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு அவர்கள் தரப்பு வாதத்தை அறிவுரைக் கழக தலைவர், உறுப்பினர்கள் முன் வைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதம் முடிந்த பின்பு விசாரணை அதிகாரி  அறிவுரைக் கழகத்தில் ஆஜராகி குண்டர் சட்டம் பதியப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்களை மையமாக வைத்து அறிவுரைக் கழகத்திடம் நிரூபிக்க வேண்டும்.

அறிவுரை கழகத்தில் குண்டர் சட்டம் உறுதிப்படுத்தப்பட்டால், அந்த நபர் உயர்நீதிமன்றம் மூலமாக மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பையும் சட்டம் வழங்குகிறது. தற்போது அறிவுரைக் கழகத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராம், உறுப்பினர்களாக அக்பர் அலி மற்றும் ஆனந்தி ஆகியோர் உள்ளனர். இந்த அறிவுரைக் கழகம் குண்டர் சட்டம் மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குள்ளானவர்கள் வழக்கையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.