சென்னையை அடுத்த குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு விசாலினி, என்ற மகளும், சாய் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வீட்டில் எலிமருந்து வைக்கக் கூறியிருக்கின்றன.
இதன் பேரில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் மருந்தை அடித்து விட்டு வீட்டின் ஹால் மற்றும் சமையல் அறைகளில் எலிமருந்து வைத்துவிட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட நெடியால் கிரிதரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மகள் மற்றும் மகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கிரிதரன் மற்றும அவரது மனைவி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர்தாஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வீட்டில் ஹால் மற்றும் சமையல் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் அளவுக்கு அதிகமான எலிமருந்து வைத்துவிட்டு சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தி.நகர் தாமோதரன் தெருவில் யூனிக் பெஸ்ட் மேனஜ்மெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம் குமார் தலைமறைவாக உள்ள நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் நிறுவனத்தில் சோதனை நடத்தி உள்ளனர். தொடர்ந்து 3 நாட்களாக சோதனையை நடத்தி உள்ளனர். அங்கிருந்த மருந்துகளை வேளாண்துறை அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். விதிகளை மீறிஅந்த நிறுவனம் செயல்பட்டு உள்ளதை வேளாண்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் விதிமுறை மீறி எலி மருந்துகளை வீட்டில் வைத்ததால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமத்தை வேளாண்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். தி.நகரில் உள்ள அலுவலகத்தை சோதனை நடத்தி எலி, கொசு உள்ளிட்ட மருந்துகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக அலுவலகம் செயல்படாமல் மூடியபடியே உள்ளது. கடந்த 5 வருடங்களாக தி.நகரில் யூனிக் பெஸ்ட் மேனஜ்மெண்ட் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முதலில் அதே தி.நகரில் வேறொரு முகவரியில் செயல்பட்டு வந்துள்ளது. தற்போதுதான் தி.நகர் தாமோதரன் தெருவிற்கு இடம் மாறி உள்ளது. அது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் அந்நிறுவன உரிமையாளர் பிரேம்குமார் தெரிவிக்கவில்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் எது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.