தமிழ்நாடு

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!
ஆட்டம் காட்டக் காத்திருக்கும் பெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில்  புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் வருகிற 2ஆம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயலை எதிர்க்கொள்வதற்காக சென்னை காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு இடம் தேடி உதவிகள் செய்வதற்காகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளவும் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 39 சிறிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு மீட்பு குழுவில் ஒரு எஸ்.ஐ தலைமையில் சுமார் 12 காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மீட்பு குழுவிலும் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ரப்பர் படகுகள், மிதவை ஜாக்கெட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மீட்பு குழுவினருக்கும் நீச்சல் மட்டுமே மீட்பு பணிகளுக்கு உண்டான பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மீட்பு உபகரணங்களுடன் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எழும்பூர் உதவி ஆணையர் ஜெகதீசன், 24மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைவார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் தாழ்வான பகுதிகளையும், மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு நேரில் சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.