தமிழ்நாடு

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்

டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்
Farewell to DGPs Shankar Jiwal and Sailesh Kumar Yadav
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் வீட்டு வசதி கழகத்தின் இயக்குனர் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு, இருவருக்கும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட இரு டிஜிபிகளும் திறந்தவெளி ஜீப்பில் மைதானத்தைச் சுற்றி வந்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் தொடக்க உரையை வழங்கிய சென்னை காவல் ஆணையர் அருண், பல்வேறு முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதிகாரிகள் ஓய்வு வயது குறித்து ஆணையர் அருண் பேச்சு

"இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு என்பது மாறிக்கொண்டே வருகிறது. மேற்கு நாடுகளில் ஓய்வு வயது என்ற ஒன்று கிடையாது. அதிகாரிகள் தகுதியாக இருந்தால் தொடர்ந்து பணியாற்றலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சராசரி இந்தியனின் வயது 35 ஆகும். தற்போது தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாக அது 71 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நமது காவல்துறை அதிகாரிகள் ஆரோக்கியமாக இருக்கும்போது 60 வயதில் ஓய்வு பெறுவது சிறப்பாக இல்லை. ஓய்வு பெறும் வயதை மாற்ற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

சைலேஷ் குமார் யாதவ் குறித்து ஆணையர் அருண் பேச்சு

"சைலேஷ் குமார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. அவர் பாளையங்கோட்டையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கினார். அப்போது திருநெல்வேலியில் காவல் ஆணையரகம் உருவாக்கப்படாததால், ஜாதிப் பிரச்சினை, மாஞ்சோலை எஸ்டேட் சம்பவம், தாமிரபரணி சம்பவம் போன்றவற்றை எதிர்கொண்டு, வன்முறையைக் கட்டுப்படுத்தினார். பல்வேறு எதிர் கருத்துகளையும் விசாரணைகளையும் சந்தித்த அவர், பின்னர் தூத்துக்குடி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு எஸ்பி-யாகப் பணிபுரிந்தார். நான் கரூரில் எஸ்பி-யாக இருந்தபோது, எனக்குக் காதல் கலப்புத் திருமணம் நடந்தது. எனது மனைவி ஈரோட்டைச் சேர்ந்தவர். ஆனால், ஈரோட்டிலிருந்து உறவினர்கள் பெரும்பாலும் வரவில்லை. அப்போது ஈரோடு எஸ்பி-யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் எனது திருமணத்திற்கு வந்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தையும் அவர் கட்டுப்படுத்தியபோதும், முடிவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், மீண்டும் வழக்குகள், விசாரணை எனப் பாதிக்கப்பட்டார். இவ்வளவு சவால்களையும் களத்தில் சந்தித்த அவர், தற்போது காவலர் வீட்டு வசதி கழகத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார்," என அருண் குறிப்பிட்டார்.

சங்கர் ஜிவால் குறித்து ஆணையர் அருண் பேச்சு

"டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், சேலத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கினார். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர்கள் 'அழகான இளம் காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறார்' என்று பேசிக்கொண்டனர். அவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் டிஐஜி-யாகப் பணியாற்றியபோது, மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை ஐஜி-யாக இருந்தபோது, நான் சிபிசிஐடி எஸ்பி-யாக திண்டுக்கல் மருத்துவர் பாஸ்கர் கடத்தல் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது சங்கர் ஜிவால் அளித்த அறிவுரையின் அடிப்படையில் பயங்கர குற்றவாளியை உடுமலைப்பேட்டையில் கைது செய்தோம்.

பின்னர், பத்து வருடங்களாக பதவி உயர்வு கிடைக்காமல் ஏடிஜிபி-யாக இருந்த அவர், அதைப்பற்றி கவலைப்படாமல் புத்தகங்களைப் படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். சென்னை காவல் ஆணையராக வந்த பிறகு, 'மகிழ்ச்சி', 'பருந்து', 'சிற்பி' போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நண்பராகப் பணியாற்றினார். மிகவும் சிறப்பான பணியின் மூலம் தமிழக டிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்றார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்," என்று அருண் தெரிவித்தார்.

டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் உரை

"இந்த பிரிவு உபசார விழாவில் எனது அம்மா வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. தனியார் பள்ளியில் படித்த நான், அரசு அளித்த பல்வேறு வாய்ப்புகளின் அடிப்படையில் தமிழக காவல்துறையின் டிஜிபி-யாக உயர்ந்துள்ளேன். திருநெல்வேலியில் எனது பணியைத் தொடங்கினேன். நான் பல்வேறு ஜாதிப் பிரச்சினைகளைக் கையாண்டுள்ளேன். பின்னர் தூத்துக்குடி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வந்தேன்.

2017-ஆம் ஆண்டு மதுரையில் தனது சக அதிகாரிகளின் உதவியுடன் பெரிய போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன். அதேபோல், மே 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கையாண்டது மிகவும் சவாலான சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையாகும். எங்களுடைய நடவடிக்கை விதிமுறைப்படி சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் பின்பு சிபிஐ, தேசிய மனித உரிமை ஆணையம் எனப் பல விசாரணைகளை எதிர்கொண்டோம். 13 பேர் இறந்த விவகாரம் எனக்குக் கடும் பாரமாகவே உள்ளது.

சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏடிஜிபி-யாக இருந்தபோது, ஜாதி ரீதியான மோதல்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் என்பதைக் கண்டறிந்தேன். எனது ஆய்வின் அடிப்படையில் அரசு பல்வேறு நிதிகளை ஒதுக்கி உட்கட்டமைப்புகளை உருவாக்கியது. மேலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி-யாக இருந்தபோது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல பழங்கால சிலைகளை மீட்டுள்ளேன்," என சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.

டிஜிபி சங்கர் ஜிவால் உரை

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், "இத்தனை ஆண்டுகளாக என்னுடன் துணை நின்ற எனது பாதுகாப்பு அதிகாரிகள் தான் உண்மையான கதாநாயகர்கள். இரவு பகலாக அவர்கள் என்னோடு பயணித்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தால் அது உங்கள் வாழ்விற்கு உயர்வளிக்கும்," எனத் தெரிவித்தார். மேலும், "என்னுடைய பயணம் நீண்ட மற்றும் இனிமையானது. உங்களுக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறி தனது உரையை முடித்தார்.