Storm Warning Cage Number 1 in Chennai Port : கடந்த சில தினங்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த வாரம் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்திருந்தது. குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கும் இதேநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர் உட்பட தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இதனிடையே வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் என இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.