சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி தற்பொழுது நலமுடன் உள்ளார். மதியத்திற்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து வசதிகளும் அவர் மாற்றப்பட உள்ள தனி அறையிலும் தயார் நிலையில் உள்ளது.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சியில் ஈடுபடுதல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்துதல், மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீது தாக்குதலை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் ஏற்றப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு விக்னேஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவம் இனி எப்போதும் நிகழக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொருட்டு மருத்துவமனைகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் செயல்படுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் புற காவல் பணிகள் மற்றும் ரோந்து பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்று நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நோயாளிகளுடன் வரும் பயணிகளுக்கு நான்கு நிறத்திலான அடையாள அட்டைகள் கையில் கட்டப்படும். இந்த டேக் கட்டும் நடைமுறை கடந்த அக்டோபர் மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இந்த டேக் கட்டும் நடைமுறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் பாதுகாப்பை 100% உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து நோய்களும் கட்டுக்குள்தான் உள்ளது. ஆனாலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடியதற்கு காரணம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறை மற்றும் மருத்துவ கட்டமைப்பின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.