சென்னை: சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணுவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு என்பவரை கொண்டு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற சொற்பொழிவுகளை பள்ளிக்கல்வித்துறை அனுமதிக்கக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு ஆன்மிக சொற்பொழிவு நடத்தியது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழரசி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், ஆன்மிக போதனை செய்த மகா விஷ்ணுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இன்று அவசர ஆலோசனை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சர்ச்சையில் சிக்கியுள்ள மகா விஷ்ணு, அமைச்சர் அன்பில் மகேஷுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், இனியும் தாமதிக்காமல் கல்வித்துறையை காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் மகா விஷ்ணுவின் ஆன்மிக போதனைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தான் அனுமதி வழங்கினாரா எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஷோ ஒன்றில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகமானவர் தான் இந்த மகா விஷ்ணு. மதுரை மகா என்ற பெயரில் ஆரம்பத்தில் பல மேடைகளில் பேசிவந்த மகா விஷ்ணு, அதன்பின்னர் 2021ம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார். அப்படியே ஆன்மிக போதனைகள் செய்யத் தொடங்கிய மகா விஷ்ணு, மாணவர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி செய்வது, மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ உதவிகள் என பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதேபோல், ஆன்மிக வகுப்புகள் எடுப்பதற்காக இந்தியா முழுவதும் பயணித்து வரும் மகா விஷ்ணுவுக்கு, அரசியல் தலைவர்களுடனும் அதிக நெருக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது மகா விஷ்ணு சர்ச்சையில் சிக்கியுள்ளதை அடுத்து, அவர் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.