உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், உதகை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டார் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்கவில்லை என அதிமுகவின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட பன்னிமரம், தட்டனேரி பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மலை வேடன் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் இவர்களில் 350 பேருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு வரை பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழங்குடியினா் ஜாதி சான்று இல்லாமல் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தும் அரசு வேலை வாய்ப்பில் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கிராமத்தின் நுழைவு வாயிலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலைவேடன் பழங்குடியின மக்களை அதிமுகவின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் நேரில் சந்தித்தார். அப்போது பழங்குடியின மக்களிடையே பேசிய மாவட்ட செயலாளர், உங்களது போராட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை இருக்கும் என்றும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதிமுகவினர் தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான மலைவேடன் பழங்குடியினர் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் தமிழக அரசு மெத்தனப் போக்காக செயல்பட்டு வருவதால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருவதாகவும், போராட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை அவர்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரோ, உதகை சட்டமன்ற உறுப்பினரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ யாரும் வந்து அவர்களை சந்திக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் மலை வேடன் பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.