தமிழ்நாடு

அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து.. இருவர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து.. இருவர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் இயங்கி வரும் 840  மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று திடீரென விபத்து ஏற்பட்டது.  நிலக்கரியை தேக்கி வைக்கும் பங்கர் டேங்க் சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு அதிக புகை வெளியிடப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள்  கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஐந்து பேர் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. அதில், மூன்று பேர் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமான இருவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையில் மொத்தமாக அந்த இடத்தில் எட்டு பேர் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலக்கரி குவியலுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

முழுமையான மீட்புப்பணிகளுக்குப் பிறகே எத்தனை பேர் நிலக்கரி குவியலுக்குள் சிக்கியுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் 840 மெகாவாட் அனல் மின்நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.